ta_obs/content/03.md

11 KiB

3. ஜலப்பிரளயம்

OBS Image

அநேக நாட்களுக்கு பிறகு, ஏராளமான ஜனங்கள் பூமியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், தவறான காரியங்களைச் செய்கிறவர்களாகவும் இருந்தனர். அதினால் தேவன் முழுஉலகத்தையும் பெருவெள்ளத்தினால் அழிக்கும்படி முடிவு செய்தார்.

OBS Image

ஆனால் நோவாவுக்கோ, தேவனுடைய கண்களில் தயவு கிடைத்து. அக்கிரமம் செய்கிற மனிதர்களின் நடுவில் நோவா நீதிமானாய் இருந்தான். எனவே பெருவெள்ளம் வரபோவதாகவும், அதினால் ஒரு பேழையை உண்டாக்கும்படி நோவாவினிடத்தில் கட்டளையிட்டார்.

OBS Image

பேழையை மரத்தினால் செய்யவும் அதின் நீளம் 140மீட்டர், அகலம் 23மீட்டர், 13.5மீட்டர் உயரமுமாய் இருக்கவும், அதை மூன்று அடுக்காகவும், அநேக அறைகளை உண்டு பண்ணி, மேல்தட்டு உண்டாக்கி ஒரு ஜன்னலையும் வைக்கும்படி கூறினார். அந்த பேழையில் நோவாவும், அவனுடைய குடும்பமும் மற்றும் சகல மிருக ஜீவன்களும் ஜலத்திலிருந்து காக்கப்ப்படும் படிக்கு இவ்வாறு செய்ய கட்டளையிட்டார்.

OBS Image

நோவா தேவனுக்குக் கீழ்படிந்தான். அவனும் அவனுடைய மூன்று குமாரரும் அந்த பேழையை தேவன் சொன்னபடியே செய்தார்கள். அந்த பேழை மிகவும் பெரியதாய் இருந்ததினால் செய்து முடிக்க அநேக வருடங்கள் ஆயிற்று. பெருவெள்ளம் வரபோவதாகவும் எனவே ஜனங்கள் தேவனிடமாக திரும்பும்படி நோவா அவர்களை எச்சரித்தும் அவர்கள் அவனை நம்பவில்லை.

OBS Image

தேவன் நோவாவினிடத்தில், அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் மற்றும் மிருகங்களுக்கும் போதுமான ஆகாரத்தை சேர்க்கும்படி கட்டளையிட்டார். அவன் அப்படி செய்தபின்பு, தேவன் நோவாவினிடத்தில் அவனையும், அவன் மனைவியையும், அவனுடைய மூன்று குமாரர்களையும் அவர்களுடைய மனைவிகளையும் சேர்த்து எட்டு பேர்களை பேழைக்குள் பிரவேசிக்கும்படி கட்டளையிட்டார்.

OBS Image

பெருவெள்ளத்திலிருந்து எல்லா மிருகங்களும், பறவைகளும் ஆணும் பெண்ணுமாக பேழைக்குள் காக்கப்படும்படிக்கு நோவாவினிடத்தில் தேவன் அனுப்பினார். தேவனுக்கு பலியிடும்படிக்கு ஏழு விதமான மிருகஜீவன்கள் ஆணும் பெண்ணுமாக அனுப்பினார். எல்லாம் பேழைக்குள் நுழைந்த பின்பு தேவன்தாமே பேழையின் கதவை அடைத்தார்.

OBS Image

பின்பு பெருமழை பெய்ய ஆரம்பித்தது, நாற்பது நாள் இரவும் பகலும் ஓய்வில்லாமல் பெய்தது. ஜலம் பூமியின்மேல் அதிகமாய் பெருகினதினால், பூமியெங்குமுள்ள உயரமான மலைகளும் மூடப்பட்டன.

OBS Image

பேழைக்குள் பெருவெள்ளத்திலிருந்து காக்கப்படும்படிக்கு இருந்த மனிதர்கள் மற்றும் மிருகஜீவன்கள் தவிர வெட்டந்தரையில் வாழ்ந்த எல்லா ஜீவன்களும் மரித்துப்போயின,

OBS Image

மழை நின்ற பின்பு, பேழை வெள்ளத்தில் ஐந்து மாதம் மிதந்து கொண்டிருந்தது, அப்போது ஜலம் வற்றத்துவங்கியது. பின்பு ஒருநாள் அந்த பேழை ஒரு மலையுச்சியில் வந்து நின்றது, ஆனால் பூமி முழுவதும் வெள்ளத்தினால் மூடப்பட்டிருந்தது. மூன்று மாதத்திற்கு பிறகு, மலையின் மேற்பரப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

OBS Image

மேலும் நாற்பது நாட்களுக்கு பிறகு, ஜலம் வற்றிப்போயிற்றோ என்று அறியும்படி நோவ ஒரு காகத்தை அனுப்பினான், ஜலம் வற்றிப்போன எந்த இடமும் இல்லாததினால் காகம் மறுபடியும் பேழைக்கு திரும்பிற்று.

OBS Image

சில நாள் பின்பு ஜலம் வற்றிப்போயிற்றோ என்று அறியும்படி ஒரு புறாவை அனுப்பினான், ஜலம் வற்றாததினால் அது மறுபடியும் நோவாவினிடதிற்கு வந்தது. பின்னும் ஒரு வாரத்திற்கு பிறகு மறுபடியும் புறாவை வெளியே விட்டான், அந்த புறா திரும்பி வந்தபோது ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது. ஜலத்தின் அளவு குறைந்து, செடிகள் மறுபடியும் முளைக்கஆரம்பித்தன.

OBS Image

பின்னும் நோவா ஏழு நாள் பொறுத்து, அந்த புறாவை மூன்றாவது முறையாக அனுப்பினான். இந்த முறை அதற்கு இளைப்பாற இடம் கிடைத்ததினால் அது திரும்பி வரவில்லை. ஜலம் பூமியில் வற்ற ஆரம்பித்தது!

OBS Image

இரண்டு மாதத்திற்கு பின்பு தேவன் நோவாவினிடத்தில், நீயும் உன் குடும்பமும் சகல மிருக ஜீவன்களும் பேழையை விட்டு புறப்படு, பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். எனவே நோவாவும் அவனுடைய குடும்பமும் பேழையை விட்டு வெளிய வந்தனர்.

OBS Image

நோவா பேழையை விட்டு வந்து, பலிபீடத்தைக் கட்டி, பலியிட தகுதியான மிருகஜீவன்களை பலியிட்டான். தேவன் மிகவும் சந்தோஷமடைந்தார், நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்.

OBS Image

இனி நான் மனுஷர் நிமித்தம் பூமியை சபிக்கவோ, ஜலத்தினால் அழிக்கவோ மாட்டேன், மனிதர்களுடைய நினைவுகள் அவர்கள் சிறுவயதுமுதல் பொல்லாதவைகளாய் இருக்கிறது என்று தேவன் கூறினார்.

OBS Image

பின்பு தேவன், நான் என் வில்லை மேகத்தில் உடன்படிக்கையின் அடையாளமாக வைத்தேன். எப்போதெல்லாம் வானவில் ஆகாயத்தில் தோன்றுகிறதோ அப்போது, நான் மனிதர்களிடத்தில் செய்த உடன்படிக்கையை நினைவுகூறுவேன் என்றார்.

வேதாகம கதை: ஆதியாகமம் 6-8